முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயங்கரவாத பழி சுமத்தப்பட்ட அப்பாவி அரபு இளைஞன் பற்றிய ஸ்பானிஷ் படம்


"La víctima número 8" (எட்டாவது பலி) என்ற ஸ்பானிஷ் தொலைக்காட்சித் தொடர் Netflix இல் காணக் கிடைக்கிறது. ஒரு நாட்டின் அரச புலனாய்வுத்துறையினர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டு, அதைச் செய்தவர்கள் ஜிகாதி தீவிரவாதிகள் என்று சொல்லி ஒரு அப்பாவி அரபு இளைஞனை பலியாடு ஆக்குவது தான் கதைக்கரு. படத்தில் ஒமார் ஜமால் என்ற அரபு இளைஞனாக ஒரு ஸ்பானிஷ் நடிகரே நடித்துள்ளார். தமிழில் வெளியான விசாரணை படத்தின் பாணியில் தான் இந்தத் தொடர் எடுக்கப் பட்டுள்ளது.


ஸ்பெயினில், பில்பாவோ நகரில், "இஸ்லாமிய பயங்கரவாதம்" என்ற பெயரில் அரச புலனாய்வுத்துறை வைத்த குண்டு வெடித்து எட்டுப் பேர் பலியாகின்றனர். ஒரு அப்பாவி அரேபிய இளைஞனை கடத்திச் சென்று, "இவன் தான் அந்த குண்டு வைத்த ஜிகாதி தீவிரவாதி" என்று பழி சுமத்துகின்றனர். ஊடகங்களும் அதையே ஒப்புவிப்பதால் நாடு முழுவதும், முஸ்லிம் குடியேறிகள் உட்பட, அனைத்து மக்களும் அதை உண்மையென்று நம்புகிறார்கள். ஆனால், அந்த இளைஞன் குற்றமற்றவன் என்பதை அவனது தாயும், காதலியும் மட்டுமே நம்புகிறார்கள். இறுதியில் உண்மை வெளிவந்ததா என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

உண்மையில் அந்த குண்டுத் தாக்குதல் ஒரு தனிப்பட்ட பகை தீர்ப்பதற்காக நடத்தப் பட்டது. ஸ்பெயினில் ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் தான் இதற்குக் காரணம். அன்றைய குண்டுவெடிப்பு சம்பவத்தில் எட்டாவதாக பலியான தொழிலதிபர் உண்மையான இலக்கு. அவரது சகோதரரே சொத்துக்களை அபகரிப்பதற்காக பொலிஸ் அடியாட்களை வைத்து குண்டுவெடிப்பை நடத்தி உள்ளார்.

அந்தத் தொழிலதிபரை மட்டும் தனியாக கொலை செய்தால் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்திருக்கும். அதை விட இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று நாடகத்தை அரங்கேற்றினால் எந்த விசாரணையும் நடக்காது என்பது அவர்களது திட்டம். ஆனால், அதற்கான பலியாடாக பொலிஸ் புலனாய்வுத் துறையினரால் கடத்திச் செல்லப் பட்ட அப்பாவி அரபு இளைஞன், எதிர்பாராத விதமாக நடந்த வீதி விபத்தில் தப்பி விடுகிறான். அது தான் அவர்களது திட்டத்தை பாழாக்கி விடுகிறது.

இந்தத் தொடர் ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம் பிரஜைகள் பற்றிய மனிதாபிமான பக்கத்தை காட்டுகின்றது. ஊடகங்கள் சித்தரிப்பதற்கு மாறாக, ஐரோப்பாவில் வாழும் பெரும்பான்மை பெரும்பாலான முஸ்லிம் பொதுமக்கள், மத அடிப்படைவாதிகளின் ஜிகாதி அரசியலை முற்றாக நிராகரிக்கிறார்கள். அதிகம் பேசுவானேன், மத நம்பிக்கையாளர்களான ஒமாரின் குடும்பத்தினர் கூட, மதத்தின் பெயரால் குண்டுவைப்பவர்கள் கிறுக்கர்கள் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். இடையில் ஒரு கணம் தந்தை ஏற்றுக் கொண்டாலும், தனது பிள்ளை இப்படியான செயல்களை செய்யக் கூடியவன் அல்ல என்று தாய் வாதாடுகின்றார்.

இன்னும் சொல்லப் போனால், முஸ்லிம் சமூகத்தினர் பயங்கரவாதிகளை தீண்டத்தகாதவர்கள் போன்று ஒதுக்குவது வழமை. யாரும் அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்புவதில்லை. உதாரணத்திற்கு மாட்ரிட் நகருக்கு தப்பியோடும் ஒமார், அங்குள்ள பள்ளிவாசலில் இமாமாக இருக்கும் பழைய நண்பரை தொடர்பு கொள்ளும் நேரம் உதவ மறுக்கிறார். பின்னர் ஒரு நேரம் தேடி வரும் ஓமாரின் காதலியை கூட பொலிஸ் உளவாளி என்ற சந்தேகத்தில் தொடர்பு கொள்ள மறுக்கிறார்.

ஒமாரின் தாய் ஒரு ஸ்பானிஷ் வயோதிப மாதை பராமரிக்கும் வேலை செய்கிறார். குண்டுவெடிப்புக்கு பின்னர் அவர் அங்கு வேலைக்கு வர வேண்டாம் என்று பிள்ளைகள் சொல்கின்றனர். ஆனால் அடுத்த நாளே அந்த வயோதிப மாது தனக்கு அந்த அரபு உதவியாளர் தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். வேறு வழியின்றி பிள்ளைகளும் அவரை வரச் சொல்கின்றனர். அப்போது ஸ்பானிஷ் வயோதிப மாது ஓர் உண்மையை சொல்கிறார்.

முன்பெல்லாம் தானும் அறியாமையில் இருந்ததாகவும், ஆரம்பத்தில் தனக்கு அரபு- முஸ்லிம் உதவியாளர் வேண்டாம் என்று மறுத்து விட்டதாகவும் கூறுகின்றார். ஆனால், தற்போது பழகிய பின்னர் தனக்கு வாய்த்த உதவியாளரின் நல்ல உள்ளத்தை புரிந்து கொண்ட பக்குவத்தை வெளிப்படுத்துகின்றார். என்ன தான் அரசு மக்களைப் பிரித்தாள நினைத்தாலும், நல்ல மனிதர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கை வைத்துப் பழகுகிறார்கள் என்பதை அந்தக் காட்சிகள் விளக்குகின்றன. இது இன்றைக்கும் ஐரோப்பாவில் காணப்படும் யதார்த்தம்.

தற்செயலாக ஒமாரின் காதலிக்கு உதவ முன்வரும் ஒரு நோயாளி ஊடகவியலாளர், தொடரின் இறுதிப் பகுதியில் குற்றவாளி யார் என்ற உண்மையை கண்டுபிடிக்கிறார். அதை பொலிஸ் மா அதிபரிடமும் தெரிவித்து விடுகிறார். பில்பாவோ நகரில் குண்டு வைத்த உண்மையான பயங்கரவாதி, ஒரு பொலிஸ் புலனாய்வுத்துறை அதிகாரி என்ற உண்மை ஆதாரங்களுடன் வெளியாகிறது. இருப்பினும் என்ன?

இறுதியில் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் குடும்பம் கொலைக் குற்றத்தை ஒத்துக் கொண்டாலும், குடும்ப மானம் போய் விடக் கூடாது என்பதற்காக மூடி மறைக்கிறார்கள். ஸ்பானிஷ் அரசு தனது காவல்துறை நிறுவனத்தில் வேலை செய்தவர்களே குற்றவாளிகள் என்ற உண்மையை மக்களுக்கு சொல்ல மறுக்கிறது. தனது தவறை ஒத்துக் கொள்ள அரசு விரும்பவில்லை. ஆகவே ஜிகாதி தீவிரவாதிகளே குண்டுவெடிப்புக்கு காரணம் என்ற கதை தனது நலன்களுக்கு சாதகமானது என்று அரசு கருதுகின்றது.

மிகவும் சக்திவாய்ந்த அரசு மற்றும் பணக்காரர்களின் குறுகிய நலன்களுக்காக அப்பாவி மக்கள் பலிக்கடா ஆக்கப் படுகின்றனர். நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப் பட்டால் நீதி வென்று விடும் என்று நம்பும் அப்பாவி மக்கள் அதிகார வர்க்கத்துடன் மோத முடியாமல் ஏமாந்து போகிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் எல்லாமே சிறப்பாக நடப்பதாகவும், மனித உரிமைகள் பாதுகாக்கப் படுவதாகவும், இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் அப்பாவிகளுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள். "நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.) அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட